சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில், யுஜிசி தலைவர் பரிந்துரைத்த நபரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், யுஜிசி விதிகளின்படி துணைவேந்தர் பதவிக்கான பெயர் பட்டியலை பரிந்துரை செய்யும் தேடுதல் குழுவில், யுஜிசி பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் இடம்பெற வேண்டும் என்பது கட்டாய விதி என கூறப்பட்டுள்ளது. இந்த விதியை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 30-ம் தேதி உச்சநீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஜிசி விதிகளுக்கு முரணாக அமைக்கப்படும் தேடுதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து, ‘வேந்தர்’ என்ற பதவியை ‘தமிழக அரசு’ என மாற்றியதன் மூலம், துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் சென்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்காக கவர்னர் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், யுஜிசி பரிந்துரைக்கும் உறுப்பினரை தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிரான மனுவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இத்தகைய சூழலில், யுஜிசி தலைவர் பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு அமைக்கப்படுவது கவலைக்குரிய விஷயம் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ள போதும், கடந்த டிசம்பர் 22-ம் தேதி மாநில தேடுதல் குழுக்களின் பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டித்ததுடன், துணைவேந்தர் நியமனத்திற்கான நபர்களை பரிந்துரை செய்ய மார்ச் 21 வரை அவகாசம் வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள், துணைவேந்தர் தேர்வுக்காக பட்டியலிடப்பட்ட நபர்களுடன் நேர்காணல் நடத்தியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் நிர்வாக நடவடிக்கைகள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன என்றும், தேடுதல் குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டித்ததும், பட்டியலிடப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணான செயல்கள் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், தற்போதைய நடைமுறையில் தேடுதல் குழுக்கள் செயல்படுவது சட்டப்படி நிலைநிறுத்த முடியாததாகவும், நீதித்துறை உத்தரவுகளுக்கு முரணானதாகவும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே பரிந்துரைத்தபடி, யுஜிசி தலைவரின் பிரதிநிதியை தேடுதல் குழுவில் உடனடியாக சேர்க்க தமிழக அரசு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை, தேடுதல் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் துணைவேந்தர் தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கவர்னர் மாளிகை வலியுறுத்தியுள்ளது.
