சென்னை: தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து நடைபெறும் சட்டவிரோத குவாரி செயல்பாடுகளுக்கு தி.மு.க. அரசு துணை போவதாக, முன்னாள் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ராணுவ வீரர்கள், தங்களது சொந்த கிராமங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காக விடுப்பு எடுத்து வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பது, ஊழல் மலிந்த திராவிட முன்னேற்ற கழகம் அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கான உதாரணம் என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கல்லிப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட கல்லணை மற்றும் புதூர் கிராமங்களில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மேலும் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், கல் குவாரித் தொழிலுக்காக திட்டமிட்டு அபகரிக்கப்படுவதாக ராணுவ வீரர்கள் புகார் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதற்கு தி.மு.க. தொடர்ந்து துணை போவதாகவும், தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுவதாக அமலாக்கத்துறை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குவாரி செயல்பாடுகள் குறித்து தங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதற்குப் பிறகும், தி.மு.க. அரசு வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, இந்த சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதை அம்பலப்படுத்துவதாகவும், சட்டம், நீதி மற்றும் சாமானிய மக்களின் உரிமைகள் மீது அரசுக்கு உள்ள அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
