பராசக்தி பட விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடக விவாதத்தில் பேசிய தி.மு.க. செய்தித் தொடர்பாளர், பா.ஜ. பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் கேலிச்சிரிப்பு சிரித்து அசிங்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2026–27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாத நிகழ்ச்சியில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை மற்றும் பா.ஜ. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவாதத்தின் போது, விவாத தலைப்புக்கு தொடர்பில்லாமல், தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டம் மற்றும் ஹிந்தி திணிப்பு குறித்து ‘பராசக்தி’ படம் எடுக்கப்பட்டதாக சரவணன் அண்ணாத்துரை பேசினார். இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட ஷேசாத் பூனவல்லா, “இந்த போராட்டம் யார் ஆட்சிக் காலத்தில் நடந்தது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் “காங்கிரஸ்” என பதிலளித்தார்.
அடுத்த வினாடியே, “இப்போது நீங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறீர்கள்?” என்று ஷேசாத் பூனவல்லா கேள்வி எழுப்பினார். கேள்வியின் நோக்கத்தை உணர்ந்த தி.மு.க. பிரதிநிதி எதுவும் பேசாமல் இருந்த நிலையில், “காங்கிரசுடன் தான் கூட்டணி” என பா.ஜ. செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதைக் கேட்டதும், நெறியாளர் உட்பட விவாதத்தில் பங்கேற்ற அனைவரும் வெடிச்சிரிப்பில் தங்கள் எதிர்வினையை வெளிப்படுத்தினர். இதனால் பதில் அளிக்க முடியாமல் திணறிய தி.மு.க. செய்தித் தொடர்பாளர், மிமிக்ரி செய்வது போல கேலிச்சிரிப்பு சிரித்து நிலைமையை சமாளித்தார்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பதில் சொல்ல முடியாமல் கேலிச்சிரிப்பு சிரித்த காட்சியை கவனித்த நெட்டிசன்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். தற்போது அனைத்து சமூக ஊடகங்களிலும் அந்த வீடியோ டிரெண்டிங்கில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
