புதுடில்லி: நம் நாட்டை இழிவுபடுத்த வேண்டாம்; ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
2026–27 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பட்ஜெட் என பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில், காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தித் துறை சரிவடைந்து வருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உலகின் முன்னணி தொழிலதிபரின் கருத்தை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பொதுவாக இந்தியர்கள் அல்லாதவர்களின் கருத்துகளுக்கு தாம் எதிர்வினையாற்றுவதில்லை என்றும், ஆனால் ராகுலுக்கு உணர்த்துவதற்காக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்-இன் கருத்தை மேற்கோள் காட்ட வேண்டியதாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்றாலும், நம் நாட்டை இழிவுபடுத்தக் கூடாது என்றும், இந்தியாவின் சாதனைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள் என்றும் கிரண் ரிஜிஜூ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உலகின் பொருளாதார பலம் அமெரிக்காவிடமிருந்து இந்தியா–சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் பகிர்ந்த பட்டியலில், 26.6 சதவீத ஜிடிபியுடன் சீனா முதலிடத்திலும், 17 சதவீத ஜிடிபியுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 9.9 சதவீத ஜிடிபியுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருந்தது.
