சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானதும், போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவதாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.–பா.ஜ. கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதி பா.ஜ.வுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சியினர் நம்புகின்றனர். இதற்கேற்ப, அந்தத் தொகுதி பொறுப்பாளராக தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அ.தி.மு.க.வினர் முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முனிச்சாலையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கினார். இந்தத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்றும், பா.ஜ.வுக்கு இத்தொகுதியை ஒதுக்கியாலும் அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதில் தவறு இல்லை என்றும் கூறினார். அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, முனிச்சாலை பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது செல்லூர் ராஜு பேசியதாவது: ‘ஒவ்வொருவரின் வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவோம்’ என சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால் தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.
அ.தி.மு.க. சொல்வதைத்தான் செய்யும்; செய்வதைத்தான் சொல்லும்; இனி சொல்லாததையும் செய்யும் என்றும் அவர் கூறினார். தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்வால் மக்கள் மின் விசிறி கூட பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புதிய புதிய ஊழல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறினார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என்று உறுதி அளித்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செல்லூர் ராஜு விமர்சித்தார்.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடப்படும் என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவதற்காகத்தான் இருக்கும் என்றும், தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆண்களின் ஓட்டுகளை கவரும் வகையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நகர பேருந்துகளில் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், மதுவிலக்கு குறித்து செல்லூர் ராஜு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது, பழனிசாமியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
