சென்னை: கருத்து திணிப்புகளில் கவனம் செலுத்தி, தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம். கூட்டணி கட்சியினர் இன்னும் வேகமாக பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தனது ஆக்டோபஸ் போன்ற கரங்களை நீட்டி நாட்டை கபளீகரம் செய்ய முயல்கிறது என்றார். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தலைமை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவும், மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்பதே பா.ஜ.கவின் நோக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பா.ஜ. லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், தற்போது இருப்பதை விட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என்றும், பெரும்பான்மை இல்லாத நிலையிலும் தன்னுடைய கொடூரமான நகங்களை பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்தி வருவதாகவும் முதல்வர் கூறினார். எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன் மற்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
துரோகங்களுக்கு ஏற்ற கொத்தடிமைகளை ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி பா.ஜ. சவாரி செய்கிறது என்றும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை காட்டி மிரட்டி அமைத்துள்ள கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வந்ததாகவும் கூறினார். அந்த நிகழ்வில் அவர் அ.தி.மு.க என்ற பெயரையே உச்சரிக்கவில்லை என்றும், அ.தி.மு.க. பா.ஜ.வின் கிளை அமைப்பாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
அந்த கிளை அமைப்பை சேர்ந்த பழனிசாமி, இப்போது மோடி அளிக்காத வாக்குறுதிகளை எல்லாம் அளித்து வருவதாகவும் முதல்வர் கூறினார். கருத்துக் கணிப்புகள் மற்றும் கருத்து திணிப்புகளில் கவனம் செலுத்தி எண்ணத்தை சிதறவிட்டு தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும், கூட்டணி கட்சியினர் அனைவரும் இன்னும் வேகமாக பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இங்கு பெறப்படும் வெற்றி, பா.ஜ.வை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உரையில் வலியுறுத்தினார்.
