புதுடில்லி: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது அவதூறு கருத்துகளை பரப்பியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டி.ஜி.பி. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது.
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக ஜாதி மற்றும் மத ரீதியில் அவதூறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்க தமிழக அரசு, தமிழக டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனையடுத்து, தமிழக டி.ஜி.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டதாவது: எக்ஸ், முகநூல், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் அவதூறான, இழிவான மற்றும் புண்படுத்தும் பதிவுகளை சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையதாகக் கூறிக்கொள்ளும் நபர்கள் பரப்பியுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மனுதாரர் குறிப்பிட்ட சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பதிவுகளின் விவரங்களை வழங்கவில்லை என்றாலும், சைபர் குற்றப்பிரிவு சமூக ஊடகங்களில் அவ்வாறான பதிவுகளை தேடி சரிபார்த்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவதூறு பரப்பும் வகையிலான புத்தகங்கள், சுவரொட்டிகள் அல்லது அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்ய மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ், முகநூல், யூடியூப் உள்ளிட்ட தளங்களில் 9 சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட உள்ளடக்கங்களை அகற்றவும், போலி கணக்குகளை முடக்கவும், அசல் இணைய முகவரிகள் மற்றும் பயனர்கள் விவரங்களை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட தளங்களிடம் கோரப்பட்டுள்ளது.
முகநூலில் 14 யுஆர்எல்கள், எக்ஸில் 16 யுஆர்எல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் உள்ளடக்கங்களை தடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முகநூலில் உள்ள 4 யுஆர்எல்கள் முடக்கப்பட்டுள்ளன; மீதமுள்ளவை இன்னும் முடக்கப்படவில்லை.
மேலும், தடை செய்யப்பட்ட மற்றும் இழிவான உள்ளடக்கங்கள் பரவாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீறல்கள் கண்டறியப்படும் போதெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொது அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் நீதித்துறையின் கண்ணியம், சுதந்திரத்தை பாதுகாக்க போலீசார் உடனடி நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
