லக்னோ: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து உத்தரபிரதேசம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் உத்தரபிரதேச அரசு, ஜனவரி 31-ம் தேதிக்குள் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் சொத்து விவரங்களை ‘மானவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், உரிய காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளத்தை உத்தரபிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. சொத்து விவரங்களை பதிவேற்றும் வரையில் சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். தலைமைச் செயலாளர் முறையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதிலும், பலர் அதனை பின்பற்றவில்லை என்றும், இதனால் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளமும் அவர்களுக்கு கிடைப்பது சந்தேகமே என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
