திருவனந்தபுரம்: மத்திய பட்ஜெட்டில் கேரள மாநிலம் முழுமையாக விடுபட்டு போயுள்ளதாகவும், பட்ஜெட் அறிவிப்புகளில் கேரளா கண்ணுக்கு தெரியவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் கேரளா முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழிஞ்சம் துறைமுகம் தேசிய சொத்து என்றும், நாட்டின் கடல்சார் வர்த்தகத்தின் நுழைவாயில் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு பூஜ்ஜியமாக இருப்பதாகவும், இதை தேசிய முன்னுரிமையாக கருதாமல் கேரளாவின் பிரச்னையாக மட்டுமே பார்க்குவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவின் கடலோர நிலப்பரப்புகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பிரச்னை எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்திருந்தால் பாதுகாப்பு அவசர நிலையாக கருதப்பட்டிருக்கும் என்றும் கூறினார். கடலோர சமூகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துவது தொடர்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பட்ஜெட்டில் 3 புதிய தேசிய மருந்து மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றும் சசிதரூர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பல தேசிய மருந்து மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்கள் உள்ள நிலையில், தென்னிந்தியாவில் ஹைதராபாத் நகரத்தில் மட்டும் ஒரே ஒரு ஆராய்ச்சி மையம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கேரளாவில் வலுவான சுகாதார பாதுகாப்பு இருந்தபோதிலும், தேசிய மருந்து மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்களை வழங்க மறுப்பது பிராந்திய ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். ரசாயன மற்றும் உரங்களுக்கான நிலைக்குழு உறுப்பினராக இருந்தபோதே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்னையை எழுப்பியதாகவும், திருவனந்தபுரம் எம்.பி. என்ற முறையில் மத்திய பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், நமது வலியை பொருட்படுத்தாத மத்திய அரசுக்கும், சொந்த நிதியை தவறாக பயன்படுத்தும் மாநில அரசுக்கும் இடையில் கேரள மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், டில்லியில் நம்மை மதிக்கும் ஒரு மாற்று அரசும், கேரளாவில் வளர்ச்சியை வழங்கும் ஒரு மாற்று அரசும் தேவை என்றும், ஆனால் தற்போது இவை இரண்டும் இல்லை என்றும் சசிதரூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
