மும்பை: அயராது, நேர்மையாக உழைப்பேன் என மஹாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள மறைந்த அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் உறுதி அளித்துள்ளார்.
மறைந்த அஜித் பவார் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினருமான சுனேத்ரா பவார், மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) பதவியேற்றார். மும்பையில் உள்ள லோக் பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மகாயுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுனேத்ரா பவாருக்கு மூன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. மாநில கலால் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சிறுபான்மையினர் நலன் மற்றும் மேம்பாடு ஆகிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்துறைகள் ஒருகாலத்தில் அவரது மறைந்த கணவர் அஜித் பவார் கவனித்து வந்தவை. இருப்பினும், 62 வயதான சுனேத்ரா பவாருக்கு நிதித் துறை ஒதுக்கப்படவில்லை. அந்தத் துறையும் முன்பு அஜித் பவார் வகித்திருந்தது.
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய சுனேத்ரா பவார், மறைந்த கணவர் அஜித் பவாரின் மரபை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். துணை முதல்வர் பதவியை ஏற்கும் போது உணர்ச்சிகளால் மூழ்கியதாகவும், அந்தப் பொறுப்பை கடமை உணர்வுடன் ஏற்கும் தருணத்தில் உணர்ச்சிவசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்ற மந்திரத்தை அஜித் பவார் தமக்கு வழங்கியுள்ளதாக சுனேத்ரா பவார் கூறினார். அஜித் பவாரின் அகால மரணம் தனது இதயத்தில் மலைபோன்ற துயரத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கடமை உணர்வு, போராடும் வலிமை மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பே தனக்கு உண்மையான ஆதரவு என்றும் அவர் தெரிவித்தார்.
நீதியான, சமத்துவமான மற்றும் வளர்ந்த மஹாராஷ்டிராவை உருவாக்க வேண்டும் என்ற அஜித் பவாரின் கனவுகளை நனவாக்க, நேர்மையுடன் தொடர்ந்து உழைப்பேன் என்றும், இந்த கடினமான தருணத்தில் மஹாராஷ்டிர மக்களின் அன்பும் ஆதரவும் தான் தனது பலம் என்றும் சுனேத்ரா பவார் கூறினார். மக்களின் நம்பிக்கையின் சக்தியால், அஜித் பவாரின் எண்ணங்களை ஒளிரச் செய்து, புதிய நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
