வாஷிங்டன்: உலக நாடுகளை வரியால் மிரட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ, இஸ்ரேல் கட்டுப்படுத்துவதாக எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019ஆம் ஆண்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய எப்ஸ்டீனின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை விரிவான விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை தொடர்பான ஆவணங்கள், படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியாகி வருகின்றன. ஆரம்ப காலங்களில் டிரம்பும், எப்ஸ்டீனும் நண்பர்களாக பழகி வந்ததாகவும், அவர்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகி வரும் விசாரணை அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர், டிரம்பின் நிறுவனம் மற்றும் அவரது முதல் பதவிக்கால அரசின் நிர்வாகத்தில் அதிக அளவில் தலையீடு செய்ததாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குஷ்னரின் குடும்பத்தினர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்புடையதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற குஷ்னரின் தந்தைக்கு, அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குஷ்னரின் ரஷ்ய முதலீடுகள் மற்றும் ரஷ்ய அரசு தொடர்புடைய நிறுவனங்களுடன் இருந்த உறவுகளை வெளிப்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல், பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு மாளிகையை டிரம்ப் சுமார் ரூ.375 கோடிக்கு வாங்கி, பின்னர் வெளிநாட்டு தொடர்புகள் கொண்ட ஒரு போலி நிறுவனத்திற்கு ரூ.870 கோடிக்கு விற்றதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
