சென்னை: “மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி; தமிழகத்தின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு ஏற்படுவதாகவும், பலரின் தியாகத்தால் சிவந்த மண் இந்த சிவகங்கை என்றும் தெரிவித்தார். வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருத்து சகோதரர்கள் வாழ்ந்த மண் இந்த சிவகங்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் 50 நாட்கள் கூட வேலை வழங்கப்படவில்லை என்றும், அதற்கான நிதியும் முறையாக விடுவிக்கப்படவில்லை என்றும் முதல்வர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் 50 நாட்கள் என்பது எப்படி மாயாஜாலம் போல 125 நாட்களாக உயரும் என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளதாக அவர் கூறினார். மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும், மத்திய பாஜ அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என்றும் அவர் விமர்சித்தார்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் வரிசையாக திறப்பு விழாக்கள் நடைபெற உள்ளதாகவும், அதற்கான பணிகளுக்காகத்தான் தற்போது அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். மீண்டும் சிவகங்கைக்கு வந்து, அடிக்கல் நாட்டிய பணிகளை திறந்து வைப்பேன் என்றும் கூறினார்.
உற்பத்தித்துறை மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை ஆட்சியை பாராட்டியுள்ளதாகவும், ஆனால் அண்மையில் இங்கு வந்த பிரதமர் மோடி பொய்யான கருத்துகளை கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வறிக்கையிலும் தமிழகத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளதாகவும், ஆனால் தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், கவர்னரும் படிக்க வேண்டும் என்றும், மக்களின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்திற்காக குரல் கொடுக்காத பழனிசாமி, திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களை காப்பி செய்து, வாக்குறுதிகளாக அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் முதல்வர் கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக சொன்னதை தான் செய்கிறது, செய்வதை தான் சொல்லுகிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் முதல்வர் கூறினார். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகாலக் கோரிக்கையை இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாராலும் செய்ய முடியாது என்று சொன்னதை, ஐந்தே ஆண்டுகளில் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை திராவிட மாடல் அரசு நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி; தமிழகத்தின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி. ஒன்றாக வெல்வோம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
