காங்கிரஸ் ஆட்சியில் அசாமில் 64 லட்சம் ஊடுருவல்: அமித் ஷா குற்றச்சாட்டு
குவஹாத்தி:
காங்கிரசின் 20 ஆண்டுகால ஆட்சியில் அசாமின் ஏழு மாவட்டங்களில் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பே மாற்றம் அடைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று 1,715 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களை தொடங்கி வைத்தும் பேசினார்.
திப்ரூகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 284 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள அசாம் சட்டசபையின் இரண்டாவது வளாகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் புதிய சட்டசபை கட்டடம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதி ஆகியவை இடம்பெற உள்ளன.
இதைத்தொடர்ந்து, அருணாச்சல பிரதேச மாநில எல்லையை ஒட்டியுள்ள அசாமின் தேமாஜியில் நடைபெற்ற பா.ஜ. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, துப்ரி, பர்பேட்டா, தர்ராங், மோரிகான், போங்கைகான், நகாவ்ன், கோல்பாரா ஆகிய ஏழு மாவட்டங்கள் ஊடுருவல்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறினார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்திற்கு முன் இத்தகைய பிரச்சினை இல்லை என்றும், ஆனால் 20 ஆண்டுகால ஆட்சியில் 64 லட்சம் பேர் ஊடுருவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அசாம் மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பே மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதன் விளைவாக அசாமின் கலாசாரம் மற்றும் பழங்குடி சமூகங்களின் அடையாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல பழங்குடி சமூகங்கள் தங்களது அடையாளத்தை பாதுகாப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அமித் ஷா கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், மாநிலத்தில் இரு முறை ஆட்சியமைத்த பா.ஜ. அரசும் இணைந்து, ஊடுருவல்காரர்களின் ஆக்கிரமிப்புகளை தடுத்து, 1.26 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடுருவல்காரர்களை கட்டுப்படுத்த பா.ஜ. மட்டுமே முடியும் என கூறிய அமித் ஷா, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ. அரசுக்கு அசாம் மக்கள் மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
