“தமிழ் அழிவுக்கு சோழ மன்னர்கள் காரணம்” – திருமாவளவன் பேச்சு சர்ச்சை
சென்னை:
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் தமிழ் மற்றும் தமிழ் கலாசாரத்தின் அழிவுக்கு காரணமானவர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், “எந்த அரசன் மீதும் எனக்கு தனிப்பட்ட மதிப்பு கிடையாது. எவரையும் நான் மகத்தான சக்தியாகக் கருதுவதில்லை. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில்தான் நாடு சிதைந்தது, சமஸ்கிருதமயமாகவும் இந்துத்துவமயமாகவும் மாறியது” என தெரிவித்தார்.
மேலும், “கோவில் கருவறைகளுக்குள் இருந்த தமிழ் வெளியே தள்ளப்பட்டதற்கும், வேள்வி, யாகங்கள் அதிகரித்ததற்கும் பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த காலமே காரணம். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்ப்பெயர்கள் மறைந்து, வடமொழிப் பெயர்கள் அரசர்கள் பெயர்களாக பயன்படுத்தப்பட்டன” என அவர் விமர்சித்தார்.
“ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்களா? அவர்கள் வடமொழியில் மயங்கி, வேள்வி யாகங்களில் மூழ்கியவர்களாக இருந்தனர். அவர்கள் எவ்வளவு பெரிய அரசர்களாக இருந்தாலும், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் அழிவுக்கு அவர்கள் வழிவகுத்ததை நான் மறுப்பதில்லை” என்றும் திருமாவளவன் கூறினார்.
மேலும், “வெறும் மொழி உணர்வோ, மொழிப்பற்றோ எனக்கு போதாது. ஆண்ட பரம்பரை என்ற பெருமையை நான் ஏற்கவில்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சுக்கு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சோழ மன்னர்களை அவமதிக்கும் வகையிலான இந்த கருத்துகள் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
