புதுடில்லி: இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பயணம் அல்லது வர்த்தக நடவடிக்கைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெளிவுபடுத்தியுள்ளது.
வவ்வால், பன்றி போன்ற விலங்குகள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல், தலைவலி, சுவாச சிக்கல் மற்றும் மூளை வீக்கம் போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. தற்போதைய நிலையில், இந்தியாவில் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில், சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகளை கடுமையான மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றன. ஆனால், இத்தொற்று பரவல் பெரிய அளவிலான அச்சுறுத்தலாக இல்லை என்றும், பயணம் அல்லது வர்த்தக நடவடிக்கைகளில் தடைகள் விதிக்க தேவையில்லை என்றும் WHO அறிவித்துள்ளது.
இதன் மூலம், நிபா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை உலக சுகாதார நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
