புதுடில்லி: பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவித்திருந்த புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படக் கூடாது என்றும், தற்போது நடைமுறையில் உள்ள 2012 ஆம் ஆண்டின் விதிகளே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜாதி, மத அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுக்கும் நோக்கில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய ஒழுங்குமுறை விதிகளை யுஜிசி கடந்த ஜனவரி 14 அன்று தனது இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த விதிகள் தவறாக பயன்படுத்தப்படக்கூடும் என்றும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதனை எதிர்த்து டில்லி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், யுஜிசியின் புதிய விதிகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், யுஜிசி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டு நடைமுறைகளே தொடரும் என உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
