“மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் மேடையாக பார்லிமென்ட் இருக்க வேண்டும்” – பிரதமர் மோடி
பார்லிமென்ட் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் உயரிய மேடையாக இருக்க வேண்டும் என்றும், எம்.பி.க்கள் மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை மையமாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறிய பிரதமர், தடைகளை கடந்து தீர்வுகளை நோக்கி நகர வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததாகவும், அதில் கூறப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு எம்.பி.க்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனுடன் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய தொடக்கத்தை உருவாக்கியுள்ளதாக கூறிய பிரதமர், இந்த ஒப்பந்தம் விவசாயிகள், இளைஞர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பயன் அளிக்கும் என்றும் விளக்கினார். நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள் தற்போது நீண்டகால தீர்வுகளாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் நாட்டின் நீண்டகால வளர்ச்சியை நோக்கி அமைந்தவை என்றும், நலத்திட்ட உதவிகள் உண்மையில் மக்களை சென்றடைவதை அரசு உறுதி செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையே அரசின் முன்னுரிமை என அவர் கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டின் ஒரே பெண் நிதியமைச்சர் அவர் தான் என்றும், இது இந்திய ஜனநாயகத்தின் பெருமைக்குரிய அத்தியாயம் என்றும் குறிப்பிட்டார். தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா மீதான உலக நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
