ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் இந்திய தயாரிப்புகளுக்கு புதிய சந்தை: மோடி
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாட்டிற்கு மிக முக்கியமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளிலும் இந்திய தயாரிப்புகளுக்கான சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பிய சந்தையை இந்திய தயாரிப்புகளால் நிரப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியாக ஒன்பது முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளதாகவும், இது பார்லிமென்ட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவதோடு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருளாதார சக்தியாகவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும், இரு சபைகளிலும் இடையூறுகள் இல்லாமல் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண எம்.பி.க்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகள் தேவையற்ற இடையூறுகளை தவிர்த்து, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, வரும் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் லோக்சபாவில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தின் முடிவில், பிப்ரவரி 4ம் தேதி மாலை பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை வழங்க உள்ளார்.
வரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 5, 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவாதத்தின் இறுதியில், பிப்ரவரி 11ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்க உள்ளார்.
இதற்கிடையே, லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவும் இதேபோல் ஒத்திவைக்கப்பட்டு, இரு சபைகளும் வரும் 1ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது.
