75 ஆண்டு வரலாற்றில் இல்லாத சம்பவம்; நீதிபதி அச்சுறுத்தல் குறித்து கவர்னர் ரவி குற்றச்சாட்டு
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்று, இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.
சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய ஜனநாயகம் உணர்வில் நாகரிகமானதும், வடிவத்தில் அரசியலமைப்புச் சார்ந்ததும் ஆகும். செயல்பாட்டில் அது வலிமையானதாகவும், நிலையானதாகவும், துடிப்பானதாகவும் இருந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளான பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்திய குடியரசு, நவீன அமைப்புகளின் மூலம் தொடர்ந்து பரிணமித்து பாதுகாக்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தெளிவாக பிரதிபலிக்கின்றன. 25 கோடிக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இந்த தன்னம்பிக்கையுடன் கூடிய வளர்ச்சியின் நடுவே, அரசியலமைப்பு நிறுவனங்களை குறைமதிப்புக்கு உட்படுத்தும் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடந்தது. இது 75 ஆண்டு வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் மகிழ்ச்சி இல்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். நீதிபதியை அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கவர்னர் ரவி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 3,000க்கும் மேற்பட்டோர், தேச ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலை உணர்ச்சிபூர்வமாகப் பாடினர்.
