பாகு: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில் உருவான மோதல் தற்போது ஆறாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அஜர்பைஜான் மற்றும் கத்தார் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் சார்பில் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பகுதியிலிருந்து இன்று அதிகாலை அஜர்பைஜானின் நக்சிவன் பகுதிக்குத் டிரோன்கள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று விமான நிலையப் பகுதியில் விழுந்ததால் அங்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு டிரோன் ஷகராபாத் கிராமத்தில் உள்ள பள்ளி கட்டடம் அருகே விழுந்ததாகவும், அந்த சம்பவத்தில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை அஜர்பைஜான் கடுமையாக கண்டித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அஜர்பைஜானை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதுடன், பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஈரான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அஜர்பைஜான் வலியுறுத்தியுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதவாறு ஈரான் உறுதி அளிக்க வேண்டும் என்றும், தேவையானால் இதற்கு பதிலடி கொடுக்க அஜர்பைஜானுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் தூதரை அழைத்து அஜர்பைஜான் அரசு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஏவுகணைகள் கத்தாரின் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரான் அனுப்பியதாக கூறப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்களது பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேலும் அறிவித்துள்ளது. அதேபோல் துருக்கி நாட்டின் மீது ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துவிட்டதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில், அபுதாபி விமான நிலையத்தில் சில குறிப்பிட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக ஏடி மீடியா அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
