தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உருவாக்கப்பட்ட 51 அடி உயரமும், 65 டன் எடையுமுடைய ஐம்பொன் ஆதிபராசக்தி அம்மன் சிலை, சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் முகப்பில் பிரதிஷ்டை செய்யும் வகையில், 2016ஆம் ஆண்டு கும்பகோணம் வட்டம் சத்திரம் கருப்பூரில் உள்ள தரணி மெட்டல்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் சிலை வடிவமைப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஸ்தபதி கோபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கினர். சிலையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக மெழுகு அச்சு எடுத்து, பின்னர் ஐம்பொன்னை உருக்கி ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டது.
சுமார் 13 அடி உயர பீடமும், 38 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிலையும் சேர்ந்து மொத்தம் 51 அடி உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 65 டன் ஆகும். சிலையின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைகள், மேளதாளங்களுடன், ஏராளமான பக்தர்கள் மலர் தூவி வழிபட்டு, சிலை லாரி மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி கோவிலில் சிலை நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.
