டோக்கியோ: ஜப்பான் அரசுமுறை பயணத்தில் இருக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேக்லேவ் அதிவேக ரயிலில் பயணம் செய்து அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்தை பாராட்டினார்.
ஜப்பானின் புதிய தலைமுறை புல்லட் ரயிலான மேக்லேவ், உலகின் மிக வேகமான ரயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பாதுகாப்பு தரநிலைகள், துல்லியமான நேர கட்டுப்பாடு மற்றும் நவீன கட்டமைப்பால் இது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
ரயிலில் பயணம் செய்த யோகி, அதன் உள் அமைப்பு, பயணிகள் வசதிகள், கட்டுப்பாட்டு மையம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக அறிந்துகொண்டார்.
இந்த பயணத்தின் போது இந்தியா-ஜப்பான் இடையிலான ரயில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பானின் அனுபவம் முக்கியமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோகி ஆதித்யநாத் மேக்லேவ் ரயிலில் பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
