415 கோடி நிதி மோசடி அம்பலம்; டில்லி குண்டுவெடிப்பு தொடர்பில் பல்கலை சொத்துகளை முடக்கும் அமலாக்கத் துறை
டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக கருதப்படும், ஹரியானாவில் செயல்படும் **அல் பலாஹ் பல்கலை**யின் சொத்துகளை, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் 10-ம் தேதி, டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
விசாரணையில், டாக்டர் உமர் நபியின் கூட்டாளிகளாக கருதப்படும் பெண் டாக்டர் ஷாஹின் சையீத், டாக்டர்கள் முசாம்மில் கானே, அதிர் ராதோர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அனைவரும் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பல்கலையில் மேற்கொண்ட விசாரணையில், மாணவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது அம்பலமானது. இதையடுத்து, நிதி மோசடி தொடர்பான விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. பல்கலை வேந்தர் ஜாவத் அகமது சித்திக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், சுமார் 415 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு நவம்பரில் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியை பயன்படுத்தி, பரிதாபாத் தவுஜ் பகுதியில் புதிய கல்லூரி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த கட்டுமானங்களை நிறுத்தவும், அல் பலாஹ் பல்கலைக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விற்பனை செய்யப்படாமலும், பரிவர்த்தனை செய்யப்படாமலும் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது. விசாரணை தொடர்ந்தாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
