ஹராரே: ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதியில், ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இளம் இந்தியா அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், குரூப்–1ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப்–2ல் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இந்த நிலையில், இன்று ஹராரேயில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பைசல் ஷினோசாடா 110 ரன்களும், உசைருல்லா நியாசாய் 101 ரன்களும் (ஆட்டமிழக்காமல்) சதம் விளாசினர்.
311 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 311 ரன்கள் இலக்கு, 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை வரலாற்றிலேயே வெற்றிகரமாக விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்காக பதிவு ஆனது.
ஆரோன் ஜார்ஜ் அதிரடி சதம்
104 பந்துகளில் 115 ரன்கள் குவித்த ஆரோன் ஜார்ஜ், ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
மேலும் வைபவ் சூர்யவன்ஷி (68 ரன்கள், 33 பந்துகள்) மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே (62 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
