31 ஐநா துணை அமைப்புகள் உட்பட 66 அமைப்புகளை விட்டு வெளியேறிய அமெரிக்கா
நமது நிருபர் | அமெரிக்கா:
31 ஐநா துணை அமைப்புகள் உட்பட, மொத்தம் 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே பல்வேறு தடாலடி முடிவுகளை அறிவித்து வருகிறார்.
பிற நாடுகள் மீது கடுமையான வரி விதிப்புகள், உலகில் நடைபெறும் போர்களை தடுத்து நிறுத்துவதாக கூறும் அறிவிப்புகள், ஈரானின் அணு நிலையங்கள் மீது தாக்குதல், வெனிசுலா அதிபரை கைது செய்த நடவடிக்கை, கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சி என டிரம்பின் முடிவுகள் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக இந்த சர்வதேச அமைப்புகள் செயல்படுகின்றன என்ற காரணத்தை முன்வைத்து, அவற்றில் இருந்து விலகுவதாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதில் 31 அமைப்புகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்ந்த துணை அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் டிரம்ப் கூறியதாவது:
“இந்த அமைப்புகள் அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்கவில்லை. அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் வேறு பயனுள்ள வழிகளில் செலவிடப்பட வேண்டும். அதற்காகவே இந்த அமைப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
அமெரிக்கா விலகியுள்ள ஐநா துணை அமைப்புகளில் பொருளாதார, சமூக விவகாரங்கள், வர்த்தகம், எரிசக்தி, பாலின சமத்துவம், காலநிலை மாற்றம், குழந்தைகள் பாதுகாப்பு, அமைதி கட்டமைப்பு, குடியேற்றம், நீர்வள மற்றும் கடல்வள மேலாண்மை உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னரே, ஐநா கல்வி-கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக சுகாதார நிறுவனம், ஐநா மனித உரிமை கவுன்சில் மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து விலகுவதாகவும் டிரம்ப் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
