சுவர் இடிந்து விழுந்ததில் 7ம் வகுப்பு மாணவன் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது சுவர் இடிந்து விழுந்ததில், ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அரசு தரப்பின் பராமரிப்பு குறைபாடே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் மகன் மோகித் (11), கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தார்.
மதிய தேர்வுக்காக, வகுப்பறையில் சக மாணவர்களுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மோகித், உணவு இடைவேளையின் போது வகுப்பறை செல்லும் சாய்தளப் பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவரருகே அமர்ந்து உணவு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் அடியில் சிக்கிய மாணவனின் தலை நசுங்கி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து, கட்டடம் மற்றும் சுவரை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்து வந்த போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டம் கலைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அமுதா கூறுகையில், பள்ளியை ஏற்கனவே ஆய்வு செய்த போது பக்கவாட்டு சுவர் சேதமடைந்திருந்தது என்றும், அதை அகற்ற பொதுப்பணித் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்:
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மாணவனின் உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மாணவனின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்ததுடன், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி கட்டடங்களை முறையாக பராமரிக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
