அலிகார்:
உத்தர பிரதேசத்தில் உள்ள **அலிகார் முஸ்லிம் மத்திய பல்கலை**யில் பணியாற்றி வரும் ஹிந்து பேராசிரியை ஒருவருக்கு, கடந்த 27 ஆண்டுகளாக மத ரீதியான துன்புறுத்தல் வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மத்திய பல்கலையில், அரசியல் அறிவியல் துறை பேராசிரியையாக ரக்ஷனா கவுஷல் கடந்த 1998ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள்முதல், சக பேராசிரியர்கள் மற்றும் தற்போது டீனாக பணியாற்றும் முகமது நபிஸ் அகமது அன்சாரி உள்ளிட்டோர் தன்னை மத அடிப்படையில் துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேராசிரியை ரக்ஷனா கவுஷல் கூறியதாவது:
நான் ஹிந்து என்பதாலேயே சக ஊழியர்கள் என்னை குறிவைத்து தொடர்ந்து மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். என்னை அவமதித்து பேசிய உரையாடல்களை ஆடியோ பதிவாக சேகரித்து, துணைவேந்தரிடம் புகாராக அளித்துள்ளேன். இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளேன்.
பல்கலை டீனான அன்சாரி, “நீ ஹிந்து; இங்கு கற்பிக்க முடியாது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கு போ” என்று மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
2004ம் ஆண்டு இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்த காலத்தில், அதிக பணிச்சுமை கொடுக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணியாற்றி வந்த தனது கணவர் பாண்டே மரணம் அடைந்ததும், தன்னை மேலும் மன ரீதியாக பாதித்ததாக கூறிய அவர், “ஒருநாள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் பணியாற்றி வருகிறேன்” என்றார்.
