2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் விஜயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2047க்குள் உண்மையான வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என கூறினார். இதே நோக்கத்துடன் தான் விஜயநகரப் பேரரசும் செயல்பட்டதாகவும், பேரரசு செழிப்படைந்த காலங்களில் மக்கள் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணமே இங்கிருந்து எடுத்துச் செல்லும் முக்கிய செய்தி என்றும் அவர் தெரிவித்தார்.
விஜயநகரத்தின் செழிப்பு மற்றும் நல்லெண்ணத்தை அதிகாரிகளும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், இந்த பயணத்தின் நினைவாக ஒரு மரக்கன்றை நட்டு ஒரு சிறிய தடம் பதிக்க வேண்டும் என தன்னுடன் வந்த அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். குறிப்பாக, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக குருல்கி பகுதிக்கு சென்ற அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், அப்பகுதி மக்கள் சந்திக்கும் சிரமங்களை நன்கு அறிவதாக தெரிவித்தார். விஜயநகரில் தன்னுடன் வந்த 120 அதிகாரிகள் தலா ஒரு மரக்கன்றை நட ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த முயற்சி உள்ளூர் சமூகத்துடன் இணைந்து செயல்படவும், நிலையான வாழ்க்கையை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
இந்த மாவட்டத்தை மேலும் பசுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
