2029ல் மோடியே பிரதமர்; வளர்ச்சி அரசியல் புரியவில்லை என ராகுல் மீது அமித் ஷா தாக்கு
ஆமதாபாத்:
2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் வருவார் என்றும், ராகுல் சோர்வு அடைய வேண்டாம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மக்களின் உணர்வுகளையும், வளர்ச்சி அரசியலையும் புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் 27 கிமீ நீளமுள்ள வடிகால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பாதை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (டிசம்பர் 28) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடிகால் பாதையை திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், காங்கிரசையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் காங்கிரசை தோற்கடிக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், மோடியின் தலைமையிலான அரசு மீண்டும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “நாங்கள் ராமர் கோவிலை கட்டினால் எதிர்க்கிறீர்கள். நாங்கள் கொண்டு வரும் எந்த திட்டத்தையும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் எதிர்க்கிறீர்கள். ஊருடுவல்காரர்களை விரட்டினால் எதிர்க்கிறீர்கள். 370வது பிரிவை நீக்கினால் எதிர்க்கிறீர்கள்; பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் எதிர்க்கிறீர்கள்” என அவர் விமர்சித்தார்.
மக்கள் விரும்பும் விஷயங்களை நீங்கள் தொடர்ந்து எதிர்க்கிறீர்கள்; அப்படியானால் உங்களுக்கு ஓட்டுகள் எங்கிருந்து கிடைக்கும் என அமித் ஷா கேள்வி எழுப்பினார். உங்கள் சொந்த கட்சியினரே யதார்த்தத்தை உங்களுக்கு நம்ப வைக்க முடியாத நிலையில் இருக்கும்போது, நாங்கள் எப்படி அதை விளக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி ஆட்சி மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல், எப்ஐஆர்களை புரிந்து கொள்வதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜகவின் வளர்ச்சி சார்ந்த அரசியலும், நிர்வாக திறனும் தொடர்ந்து மக்களிடம் நல்ல எதிரொலியை பெறுகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
