சென்னை: 2026–27ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட வரவு–செலவுத் திட்டத்தில் கடன், செலவுகள் மற்றும் புதிய அறிவிப்புகள் தொடர்பான முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
அரசு அருங்காட்சியகங்கள் மேம்பாட்டின் கீழ் சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம் மற்றும் திருவண்ணாமலையில் தமிழர் பண்பாடு அருங்காட்சியகம் ஆகியவை ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.
இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் மூன்று கட்டங்களாக வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 10,549 புதிய வீடுகள் கட்டப்படும். தூய்மை பணியாளர்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் மேம்பாட்டிற்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ.327 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மத்திய சிறை மாற்றத்திற்கும் ரூ.229 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 19 முக்கிய கோவில்களில் ரூ.1,770 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் வருகையுடன் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைப்பிற்காக ரூ.425 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 84 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதி மானியங்கள் ரூ.24,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டங்களால் அரசுக்கு ரூ.10,849 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026–27ம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. வருவாய் உயர்வு நடவடிக்கைகள் மூலம் 2027–28ல் ரூ.42,964.61 கோடியாகவும், 2028–29ல் ரூ.35,115.33 கோடியாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நிர்ணயிக்கும் கடன் வரம்பின் அடிப்படையில், 2026–27ல் மாநில அரசு ரூ.1,79,809.65 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ரூ.60,413.42 கோடி பொதுக் கடனை திருப்பிச் செலுத்தும். இதனால் மாநில அரசின் மொத்தக் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும். நடப்பாண்டில் கடன் ரூ.9.52 லட்சம் கோடியாக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவீதமாகும்.
