சென்னை: அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு இன்று தொடங்குவதாக கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நமது அரசியல் பெரும்பயணம் தொடர்ந்து நீள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன்மை அரசியல் சக்தியாக மாறும் முன்பே, மக்கள் இயக்கமாக மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம் என்றும், இதை நாடறியும், நல்லவர்கள் அறிவார்கள் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சலனங்களை புறந்தள்ளி, சமநிலை தவறாத ஆழ்கடலாகவும், எவராலும் விலக்க இயலாத விரிவானமாகவும், அனைத்து இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும் சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசமே தவெக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் களம் இதுவரை இல்லாத புதிய சூழலை சுமந்து நிற்கிறது என்றும், அதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என அனைவரும் கூறுவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
எனவே, இச்சூழலில் களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாக களமாடி, ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என்றும், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
