2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை சபாநாயகர் அப்பாவு, 2026-ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20-ந் தேதி நடைபெற கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டசபை தொடங்கும் என்றும், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அதே நாளில் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
2025-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் தேசிய கீதம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் கவர்னர் தனது உரையை புறக்கணித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர், தமிழக சட்டமன்றத்தின் மரபு எதுவும் மீறப்படாது என்றும், அந்த மரபுகளை கவர்னர் மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து சட்டசபை கூட்டத்தொடர்கள் பல்வேறு சர்ச்சைகளுடன் முடிவடைந்து வருகின்றன. 2023-ம் ஆண்டு முதல் கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் கவர்னர் தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்தார். அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களும், திராவிட மாடல் போன்ற சொற்களும் இடம்பெறாதது ஆளும் தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கவர்னருக்கு எதிரான தீர்மானம் அவர் முன்னிலையிலேயே வாசிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே கவர்னர் அவையை விட்டு வெளியேறினார்.
2024-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரிலும், அரசு வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காமல் தேசிய கீதம் குறித்து சில கருத்துகளை மட்டும் தெரிவித்து கவர்னர் உரையை முடித்துக் கொண்டார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையை தமிழில் வாசித்தார். மத்திய அரசை விமர்சித்து, மாநில அரசை பாராட்டும் அம்சங்கள் கொண்ட அந்த உரை அவைக் குறிப்பில் இடம்பெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 2025-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற கூட்டத்தொடரில், தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை காரணமாகக் கூறி, கவர்னர் உரை வாசிக்காமல் சட்டசபையிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், அரசியலமைப்புச் சட்டமும் தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அடிப்படை கடமை என்றும், அதற்கு உடன்படாத நிலை ஏற்பட்டதால் அவையை விட்டு வெளியேறியதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.
கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக சர்ச்சையாகி வருகின்றன. இந்தச் சூழலில், வருகிற ஜனவரி 20-ந் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா அல்லது தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கத் தயாராக உள்ள நிலையில், அவற்றிற்கு ஆளும் தரப்பு பதிலளிக்கும் என்பதால், இந்த கூட்டத்தொடரில் தீவிரமான விவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
