மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் வர்த்தக முன்னேற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 2026ம் ஆண்டில் பல முக்கிய வர்த்தக மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா இறுதி முத்திரை பதிக்கும் என அவர் கூறினார்.
பிரிட்டன் மற்றும் ஓமன் நாடுகளுடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் கையெழுத்தாகி, ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார். நியூசிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வரும் எனவும் விளக்கம் அளித்தார்.
இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது என குறிப்பிட்ட அவர், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக மாறும் முயற்சியில் ஏற்றுமதி முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் உலகளாவிய வர்த்தக நிலை மேலும் வலுப்பெறும் என பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
