2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
புதுடில்லி:
2025ம் ஆண்டில் கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆபரேஷன் சிந்துார் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில், 2025ம் ஆண்டில் இந்தியா கண்ட பெருமைமிகு தருணங்களை பட்டியலிட்டு அவர் உரையாற்றினார். அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார் என கூறினார். மேலும், 2025ம் ஆண்டில் கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் என இந்தியா பல சாதனைகளை பதிவு செய்துள்ளதாகவும், பாரதத்தின் மகள்கள் பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றதன் மூலம், பாரா தடகள வீரர்கள் எந்த தடையும் உறுதியைத் தடுக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். ஆபரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும், இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்ற செய்தியை உலகிற்கு அனுப்பியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், தனது தொகுதியான வாரணாசியில் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், ‘தமிழ் கற்கலாம்’ என்ற கருத்தின் அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு தமிழ் மற்றும் ஹிந்தி பேசுவோரை இணைத்ததாக தெரிவித்தார். இதில் ஹிந்தி பேசுவோரும் தமிழ் பேச கற்றுக்கொண்டதை கண்டு தான் வியந்ததாகவும் அவர் கூறினார்.
தமிழ் பெரும் கலாசார மொழி எனக் குறிப்பிட்ட பிரதமர், நம்பிக்கை, கலாசாரம் மற்றும் பாரதத்தின் தனித்துவமான பாரம்பரியம் 2025ம் ஆண்டில் ஒன்றாகக் காணப்பட்டதாக தெரிவித்தார். ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா நடத்தப்பட்டதாகவும், அது உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியதாகவும் கூறினார். ஆண்டின் இறுதியில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்த கொடியேற்ற விழா ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று நாட்டின் பல பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் உருவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இதுவே மொழியின் சக்தி; இதுவே இந்தியாவின் ஒற்றுமை என்றும் அவர் கூறினார்.
சுதேசி பொருட்கள் மீது மக்களிடையே உற்சாகம் அதிகரித்து வருவதாகவும், இந்தியரின் வியர்வையும் இந்திய மண்ணின் மணத்தையும் தாங்கிய பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 2025ம் ஆண்டு இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டில் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டதும் உண்மை என குறிப்பிட்டார். 2026ம் ஆண்டில் புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை குறிப்பிட்ட பிரதமர், சமீபத்தில் நடந்த வினாடி வினா போட்டியில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றதாக கூறினார். மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தமிழகம் முதலிடம் பெற்றதாகவும், உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஜியில், இந்திய மொழி மற்றும் கலாசாரத்தை பரப்புவதற்கான முயற்சிகள் மனதைத் தொடுவதாக பிரதமர் மோடி கூறினார். அங்கு புதிய தலைமுறையினரை தமிழ் மொழியுடன் இணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த மாதம் ராக்கி-ராகியில் உள்ள ஒரு பள்ளியில் முதல் முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்வில் குழந்தைகள் தமிழில் கவிதை வாசித்ததும், உரையாற்றியதும், மேடையில் தங்கள் கலாசாரத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியதும் மகிழ்ச்சியளித்ததாக கூறினார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
