1971-ஐ நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க வங்கதேசத்திடம் ரஷ்ய தூதர் வலியுறுத்தல்
டாக்கா: 1971ஆம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரம் பெற்ற போது இந்தியா வழங்கிய பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவுடனான பதட்டங்களை விரைவில் தணிக்க வேண்டுமென்றும் வங்கதேசத்திற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் வலியுறுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று மற்றொரு மூத்த தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, கலவரங்கள், சிறுபான்மையினர் போராட்டங்கள் மற்றும் நிலவும் பதற்றங்கள் அதிகரிப்பது குறித்து ரஷ்ய தூதர் எச்சரிக்கை விடுத்தார். அண்டை நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான நிலையான உறவுகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியாவுடனான பதட்டங்களை விரைவில் குறைப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் தாமதம் செய்யாமல் விரைவாக செயல்படுவது நல்லது என்றும், வரலாற்று ரீதியாக 1971ஆம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரம் பெற்றதில் இந்தியாவின் உதவி முக்கிய பங்கு வகித்தது என்றும் அவர் கூறினார். அந்த காலகட்டத்தில் ரஷ்யாவும் ஆதரவளித்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
மேலும், இந்தியா, வங்கதேசம் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், வங்கதேசம்–இந்தியா இருதரப்பு உறவுகளில் ரஷ்யா தலையிடுவதில்லை என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து பதற்றம் மேலும் அதிகரிக்காமல் இருக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும் என்று ரஷ்யா கருதுகிறது என்றும் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் தெரிவித்துள்ளார்.
