திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், தனது பழமை மற்றும் கலைநயமான சிற்பங்களுக்காக புகழ்பெற்றது. குறிப்பாக கல் மற்றும் வெண்கலச் சிலைகள் இக்கோயிலின் முக்கியமான பாரம்பரியச் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் மிகவும் அரியதாகக் கருதப்படுவது திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையாகும்.
பன்னிரு ஆழ்வார்களில் இறுதியானவராக விளங்கிய திருமங்கை ஆழ்வார், மற்ற ஆழ்வார்களிலிருந்து வித்தியாசமான வரலாற்றை கொண்டவர். முதலில் சோழ மன்னனின் படைத்தளபதியாக பணியாற்றிய அவர், பின்னர் ‘ஆலிநாடன்’ என்ற பெயரில் குறுநில மன்னராக ஆட்சி செய்தார். அதன் பின்னர் இறைவனின் அருளால் தீவிர வைணவ அடியாராக மாறி பக்திப் பாதையில் பயணித்தார். போர்வீரராக இருந்த அவரது பின்னணியை பிரதிபலிக்கும் வகையில், திருமங்கை ஆழ்வாரின் சிலைகள் பொதுவாக மற்ற ஆழ்வார்களைப் போல கைகூப்பி நிற்காமல், ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் கேடயமும் ஏந்திய வீரத் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்தச் சிலை கி.பி. 16ஆம் நூற்றாண்டில், அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 60 செ.மீ உயரம் மற்றும் சுமார் 20 கிலோ எடை கொண்ட இந்த வெண்கலச் சிலையின் சர்வதேச மதிப்பு இன்று சுமார் ₹5 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆனால் 1967ஆம் ஆண்டு இந்த அரிய சிலை கோயிலிலிருந்து திருடப்பட்டது. திருட்டை மறைக்க, அசல் சிலையைப் போலவே ஒரு போலி சிலையை செய்து கோயிலில் வைத்துவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் பல ஆண்டுகளாக இந்தச் சிலை திருடு போனது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. கடத்தப்பட்ட அசல் சிலை பலரின் கைகளில் மாறி இறுதியில் லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டு, அங்கு காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு லண்டன் அருங்காட்சியகத்திற்கு சென்ற சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் கவனத்திற்கு இந்தச் சிலை வந்தது. சிங்கப்பூரில் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றும் அவர், கடத்தப்பட்ட இந்தியச் சிலைகளை கண்டறிந்து மீட்பதில் தன்னார்வமாக ஈடுபட்டு வருகிறார்.
அவர் தனது தரவுத்தளத்தில் இருந்த 1957ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் எடுத்த தாடிக்கொம்பு கோயிலின் பழைய புகைப்படங்களுடன் லண்டனில் இருந்த சிலையை ஒப்பிட்டு ஆராய்ந்தார். சிலையின் நுணுக்கமான வடிவமைப்புகள், பீடத்தின் அடையாளங்கள் மற்றும் வாளின் அமைப்பு போன்ற விவரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் தேவையான ஆதாரங்களுடன் இந்த தகவலை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு அனுப்பினார்.
தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் இந்திய தூதரகம் வழங்கிய உறுதியான ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அந்தச் சிலையை இந்தியாவுக்கு திருப்பித் தர ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில், அருங்காட்சியக அதிகாரிகள் அந்தச் சிலையை இந்திய தூதர் விக்ரம் துரைசாமியிடம் முறையாக ஒப்படைத்தனர்.
இன்னும் சில நாட்களில் இந்தச் சிலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புடன் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலான காலத்திற்குப் பிறகு, ஒரு வீர ஆழ்வாரின் சிலை தனது சொந்த மண்ணிற்கு திரும்புவது, கடத்தப்பட்ட பிற இந்தியச் சிலைகளையும் மீட்டெடுக்க புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
