18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா–ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி விளக்கம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான நீண்டகால வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சுமார் 18 ஆண்டுகளாக இடைநிறுத்தங்களும், கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்த நிலையில், தற்போது இரு தரப்பும் ஒரு விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஒற்றுமை அடைந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்கையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே நிலவி வரும் வணிக ஒத்துழைப்பை இது ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார். தற்போது ஐரோப்பிய நாடுகளில் இந்திய முதலீடு 40 பில்லியன் யூரோக்களை நெருங்கி உள்ளதாகவும், ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் இரு தரப்புகளுக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜவுளி, ரத்தினக் கற்கள், நகைகள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் போன்றவை ஐரோப்பிய சந்தைகளில் எளிதாக அணுகும் நிலை உருவாகும். அதேபோல், பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் கடல்சார் தயாரிப்புகளுக்கும் கூடுதல் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பயன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நேரடியாக சென்று சேரும் என்றும், சேவைத்துறைகளான தகவல் தொழில்நுட்பம், கல்வி, பாரம்பரிய மருத்துவம் மற்றும் வர்த்தக சேவைகள் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
உலக வர்த்தக சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட, எதிர்கால நோக்குடன் கூடிய கூட்டாண்மையை உருவாக்கும் ஒரு தெளிவான செய்தியாக அமைந்துள்ளதாக அவர் விளக்கினார்.
