லண்டன்: பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் முக்கிய பங்காற்றிய கிழக்கிந்திய கம்பெனி, 170 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக மூடப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த வணிகர்கள் கூட்டு முதலீட்டில் 1600ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். ஆரம்பத்தில் வர்த்தக நிறுவனமாக செயல்பட்ட இது, பின்னர் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைப் பெற அடித்தளமாக அமைந்தது. 1857 சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, 1858ஆம் ஆண்டு நிறுவனம் பிரிட்டன் அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது.
விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில், 1874ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது.
அதன் பின்னர் 135 ஆண்டுகள் கழித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா 2010ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை மீண்டும் தொடங்கினார்.
அவர், கிழக்கிந்திய கம்பெனியின் பெயர் உரிமையை வாங்கி, லண்டனின் மேபேர் பகுதியில் ஆடம்பர தேநீர், உணவு பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்றவற்றை விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றினார்.
ஆனால் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கிழக்கிந்திய கம்பெனிக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
