17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பினார் தாரிக் ரஹ்மான் – உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!
டாக்கா: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேச தேசியவாத கட்சியின் செயல்தலைவரும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ளார்.
ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். தற்போது அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனைவி ஜூபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் விமானம் மூலம் டாக்காவை வந்தடைந்தார்.
அவரின் வருகையை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்து திரண்ட கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், குண்டு துளைக்காத வாகனத்தில் அவர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். சாலையின் இருபுறங்களிலும் நின்ற தொண்டர்கள் கோஷமெழுப்பி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, டாக்காவின் பூர்பச்சல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாரிக் ரஹ்மான் உரையாற்றினார். 1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் போலவே, 2024 ஆம் ஆண்டில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க போராடியதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் உரையை நினைவுபடுத்தும் வகையில், வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தனக்கு தெளிவான திட்டம் இருப்பதாக தெரிவித்தார். மதம், இனம் பேதமின்றி அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே தனது இலக்கு எனவும் அவர் உறுதி அளித்தார்.
