16 வயதுக்குக் கீழ் சமூக ஊடகங்களுக்கு தடை? கோவா அரசு பரிசீலனை
கோவாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாமா என்பது குறித்து மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இளம் தலைமுறையினர் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளோர் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. புதிய கணக்குகள் உருவாக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கணக்குகளும் நீக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. விதிகளை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில், இந்தியாவிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் சாத்தியமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதேபோல், ஆந்திரப் பிரதேசத்தில் கூட இளம் வயதினரின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கோவா அரசும் ஆஸ்திரேலிய முறைமையை முன்மாதிரியாக கொண்டு 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டில் தடை விதிக்க முடியுமா என்பதை பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கோவா மாநில அமைச்சர் ராகுன் கவுன்டே, நடைமுறை சாத்தியங்கள் இருப்பின் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
