16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதள கட்டுப்பாடு? – ஆந்திர அரசு ஆலோசனை
அமராவதி:
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக, அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற நாரா லோகேஷ், இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் காணும் உள்ளடக்கங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றார்.
வலுவான சட்ட கட்டமைப்பு தேவை
சிறுவர்கள் தாங்கள் சமூக ஊடகங்களில் பார்க்கும் மற்றும் பகிரும் விஷயங்களின் தாக்கத்தை உணராமல் செயல்படுகிறார்கள்.
இதனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக்கூடாது என்பதே தனது கருத்து என்றும், இதற்காக வலுவான சட்ட கட்டமைப்பு காலத்தின் அவசியம் என்றும் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா முன்மாதிரி
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் டிக்டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றியது.
அந்த சட்டத்தின் அடிப்படையில், 16 வயதுக்கு உட்பட்டவர்கள் புதிதாக சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க அனுமதி இல்லை. ஏற்கனவே இருந்த கணக்குகளும் முடக்கப்பட்டன.
இந்தியாவில் முதல் மாநிலமாகும் வாய்ப்பு
ஆஸ்திரேலியாவின் இந்த நடைமுறையை முன்மாதிரியாக கொண்டு, ஆந்திர அரசும் சமூக வலைதள கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் சமூக வலைதள பயன்பாட்டுக்கு வயது வரம்பு விதிக்கும் முதல் மாநிலம் என்ற பெயரை ஆந்திரா பெறும் என மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
