பெங்களூரு: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசு தடை விதிக்க உள்ளதாக, பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், மாநில அரசுகளும் தங்களின் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வது வழக்கமாக உள்ளது. அதன்படி இன்று கர்நாடக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 17வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
-
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசு தடை விதிக்க உள்ளது. குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், கல்வியில் செல்போன்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்படும். மேலும் முக்கிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
-
2025-26ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும். இது தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
-
அரசியலமைப்பின் படி கூட்டாட்சி ஆட்சி முறையை பின்பற்றாமல், கர்நாடகாவிற்கு மத்திய அரசு அநீதி செய்கிறது.
-
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக அரசு பணிகளில் ஆட்சேர்ப்பு தாமதமாகி வருவதைக் கருத்தில் கொண்டு, வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டில் பல்வேறு அரசுத் துறைகளில் 56,432 பணியிடங்களை நிரப்பும் பணியை தொடங்கியுள்ளோம்.
உலக நாடுகளில் ஓர் அலசல்!
சமூக வலைதளங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து உலகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பல நாடுகள் சமூக வலைதளங்களுக்கு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன.
அந்த வகையில் ஆஸ்திரேலியா, மலேஷியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதித்துள்ளன. டென்மார்க் மற்றும் கிரீஸ் நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
