சென்னை:
‘சம வேலைக்கு, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கடந்த 14 நாட்களாக சென்னையின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், எழும்பூர் வட்டாரக் கல்வி அலுவலகம், எழிலகம் உள்ளிட்ட இடங்களில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தினமும் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர்.
இந்நிலையில், 15வது நாளான நேற்று, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி, பிரமாண்ட பேரணியை ஆசிரியர்கள் நடத்தினர். பேரணி செல்லும் வழியில் போலீசார் இரும்புத் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்தனர். இதனால் ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 2,500 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் குறித்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், “சென்னையில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரினால், சம்பளத்தை பிடித்தம் செய்வோம் என மிரட்டுகின்றனர். இவ்வாறு ஆசிரியர்களை நடத்துவது வேறு எங்கும் காண முடியாத நிலை,” என்றார்.
