திருப்பரங்குன்றம்: முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமையுடன் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பிரதமர், அதன் பின்னர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றார்.
மாலை 4:12 மணியளவில் காவி சால்வை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து கோயிலுக்கு வந்த அவருக்கு மேளதாளங்களுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் ஸ்தானிகர்கள் ராஜா மற்றும் சந்திரசேகரன் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.
பின்னர் அவர் நேரடியாக மூலஸ்தானத்திற்கு சென்று குன்றத்து குமரனை பக்தியுடன் வழிபட்டார். அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தரிசனம் முடித்து வெளியே வரும் போது கொடிமரம் மண்டபத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் மற்றும் தெய்வானை திருக்கல்யாண அலங்காரப் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
சுமார் 15 நிமிடங்கள் கோயிலில் இருந்து வழிபாடு செய்த பிரதமர் மோடி மாலை 4:32 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார். அவருடன் கவர்னர் ஆர். என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
