ஜெய்ப்பூர்: பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 14 வயது சிறுமியருக்கான மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) இலவச தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் அஜ்மீரில் தொடங்கி வைத்தார்.
ராஜஸ்தானில் பஜன் லால் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அஜ்மீர் மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர், ரூ.16,680 கோடி மதிப்பிலான பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனுடன், நாடு முழுவதும் 14 வயது சிறுமியருக்கான இலவச HPV தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ் ‘Gardasil 4’ எனப்படும் தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படும். இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் HPV வைரஸ் வகைகள் 16 மற்றும் 18-க்கு எதிராகவும், மேலும் 6 மற்றும் 11 வகைகளுக்கும் எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்டுதோறும் சுமார் 1.15 கோடி சிறுமியருக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் பெறப்பட்ட பின் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் HPV தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
