100 நாள் வேலை திட்டம் குறித்து என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? – எல். முருகன் கேள்வி
சென்னை: நுாறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்புகளை மத்திய அரசு பறித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி வருவதாகவும், இது குறித்து தன்னுடன் நேரடியாக விவாதிக்க அவர் தயாரா என்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பினார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் ‘பாரத் 2026’ என்ற இந்திய அரசு காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காலண்டரை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் நுாறு நாள் வேலை உறுதி திட்டம் மாற்றப்பட்டு, ‘விபி ஜி ராம் ஜி’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தச் சட்டம் குறித்து இரு அவைகளிலும் விரிவான விவாதம் நடைபெற்ற பின்னரே நிறைவேற்றப்பட்டதாகவும், அப்போது தி.மு.க. உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார். தற்போது அந்தச் சட்டத்தை எதிர்த்து, மத்திய அரசு நுாறு நாள் வேலைத் திட்டத்தை பறித்து விட்டதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், நுாறு நாட்களாக இருந்த வேலை வாய்ப்பு, தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்தச் சட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எல். முருகன் விளக்கினார். சட்டம் நிறைவேற்றப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத தி.மு.க., தேர்தலை முன்னிட்டு மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகளை மத்திய அரசு பறித்ததாக குற்றம்சாட்டும் முதல்வர் ஸ்டாலின், இது குறித்து தன்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்றும் எல். முருகன் சவால் விடுத்தார்.
