10 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல முடியுமா? தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி..!
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த கருத்துகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், நாளை இந்தியாவையே கைப்பற்றுவேன் என்றுகூட விஜய் பேசலாம். பேசுவது எளிது; ஆனால் தேர்தல் அரசியல் அப்படி இல்லை என்றார்.
தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும், அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் பணத்துக்கு விலை போகாமல் இருக்க வேண்டும். அதேபோல், பூத் அளவிலான பொறுப்பாளர்களும் உறுதியுடன் செயல்பட வேண்டும். ஆனால், இவர்களிடம் அத்தகைய கட்டமைப்பே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
234 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் தற்போது சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பினார். தொடர்ந்து 10 அல்லது 15 தொகுதிகளுக்காவது பெயர் சொல்ல முடியுமா என்று சவால் விடுத்தார். இது குறை கூறுவதற்காக அல்ல என்றும், விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருக்கலாம் என்பதை மறுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜ ஒரு பெரிய தேசிய கட்சி என்றும், 272க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுடன் மத்திய ஆட்சியை அமைத்த கட்சி என்றும் குறிப்பிட்டார். மூன்று முறை முதல்வராகவும், தற்போது மூன்றாவது முறையாக பிரதமராகவும் செயல்படும் நரேந்திர மோடியின் புகழ், திறமை, அரசியல் வலிமை எந்த அளவில் உள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் சினிமா நடிகராக இருக்கும் விஜய்யின் அரசியல் வலிமை எவ்வளவு என்பது குறித்து யதார்த்தமாக பார்க்க வேண்டும் என்றும், உணர்ச்சியால் அல்ல, அரசியல் நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
