மதுரை: சமூக வலைதளங்களை பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில், கடந்த ஜனவரி 25 இரவு, முன்விரோதம் காரணமாக மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிப்ரவரி 2 இரவு, ஜீவா நகரில் ஒரு வீட்டருகே பெட்ரோல் குண்டு வீசியதோடு, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை போதையில் சேதப்படுத்தியதாக, பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்களும், படிப்பை பாதியில் நிறுத்திய 16 வயது சிறார்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஒரு பள்ளி மாணவனின் தாய்க்கும், ஜீவா நகரைச் சேர்ந்த 60 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அந்த நபரை மாணவரும், அவரது நண்பரும் தாக்கியதாக முன்பே கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் உட்பட ஏழு பேர், புகார் அளித்த நபரை மிரட்டும் நோக்கில், டூவீலரில் இருந்து பெட்ரோலை திருடி, குவார்ட்டர் பாட்டிலில் ஊற்றி, தீ வைத்து அவரது வீட்டின் மீது வீசியுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், பள்ளி மாணவர்களையும், இரு சிறார்களையும் கைது செய்தோம். சமூக வலைதளங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வீடியோக்களை பார்த்து, தாங்களும் வீச முடிவு செய்ததாகவும், அதை தயாரிக்கும் முறையை அங்கிருந்தே கற்றுக்கொண்டதாகவும், கைதான சிறார்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
