ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்
புதுடெல்லி: வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், தடுப்புகளை உடைத்து தூதரகத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வங்காள தேசத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர், கடந்த வாரம் அந்நாட்டு போராட்டக்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள தேசத்தில் உள்ள வங்காள தேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்காள தேசம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகத்திற்கு வெளியே இன்று பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து மீண்டும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், இந்தியாவில் வங்காள தேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க, வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதனிடையே, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் மீண்டும் பரபரப்பு நிலவியது.
