ஹிந்து இளைஞர் உயிருடன் எரித்த வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது
டாக்கா:
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான யாசின் அராபத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் ஹிந்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (30) என்பவர், முஸ்லிம் மதத்தை அவதூறாக பேசியதாக கூறி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
அத்துடன், தாக்குதல்காரர்கள் நிற்காமல், தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என வங்கதேச இடைக்கால அரசு உறுதியளித்திருந்தது.
இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று முக்கிய குற்றவாளியான யாசின் அராபத்தை கைது செய்தனர். 25 வயதான யாசின், தெற்கு ஹோபிர்பாரி பகுதியை சேர்ந்த காசி மியாவின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தொழிற்சாலை வாயிலில் ஹிந்து இளைஞரை தாக்கிய கும்பலை வழிநடத்தியதும், அவரது உடலை மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஸ்கொயர் மாஸ்டர்பாரி பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைப்பதில் முக்கிய பங்கு வகித்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாசின் அராபத், ஷேகாபரி மசூதியில் இமாமாக பணியாற்றியதுடன், கடந்த 18 மாதங்களாக ஒரு மதரஸாவில் போதகராகவும் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 18ம் தேதி நடந்த கொலைக்கு பிறகு, 12 நாட்கள் தலைமறைவாக இருந்த யாசின், டாக்காவில் உள்ள பல்வேறு மதரஸாக்களில் போலி அடையாளத்தில் தங்கியிருந்ததும், சுபா மதரஸாவில் ஆசிரியராக பணியாற்ற முயன்றதும் அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
